भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

பாரதவாணி திட்டத்தின் மக்கள் தகவல் வரைவு அறிக்கை

பாரதவாணி என்றால் என்ன? இத்திட்டத்தின் பின்புலம் என்ன?

இந்திய மொழிகள் பற்றிய தகவல்களை அம்மொழிகளிலேயே பல்லூடக [உரை, ஒலி, காணொலி, பட] வடிவில் இணையதளத்தில் வழங்குவதே பாரதவாணி திட்டத்தின் இலக்காகும். இவ்விணையதளம் இந்திய மொழிகளின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, ஊடாடதக்க, திறன் மிகுந்த, நெறிப்படுத்தப்படும் இணையதளமாகும். இந்த டிஜிட்டல் இந்தியா யுகத்தில் ஒரு கட்டற்ற அறிவுசார் சமூகமாக இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பாரதவாணி இணைய அறிவுக்களஞ்சியத்தின் பயனாளிகள் யார்?

வயது, பாலினம், வருமானம், பின்புலம், கல்வி (முறைசார் மற்றும் முறைசாரா) முதலிய வேறுபாடின்றி அனைத்து சமூக தரப்பினரும் பயன்படுத்த கூடிய வகையில் பாரதவாணி இருப்பதால் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இத்திட்டம் சேவை புரிகிறது.

பாரதவாணி திட்டத்திற்கான வளங்கள் (Content)  எவ்வாறு திரட்டப்படுகின்றன?

  • பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளின் அறிவுசார் வளங்களைப் பல்லூடக வடிவில் பல்வேறு அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி குழுமங்கள், பாடநூல் இயக்குனரகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி கழகங்கள் மற்றும் பதிப்பகங்களிடமிருந்து பாரதவாணி சேகரிக்கிறது.
  • நீண்டகால இணையவழி பயன்பாட்டிற்கென தனியார் நிறுவனங்களையும் இத்தகைய அறிவுசார் வளங்களை பாரதவாணி பகிர்ந்து கொள்ள வேண்டிக் கொள்ளும்.
  • திரட்டப்படும் அறிவுசார் வளங்களை முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்தி தேர்வு செய்யக் கூடிய ஒரு ஒப்புதல் வழங்கும் செயல்முறை ஏற்படுத்தப்படும். இறுதியாக வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் மீது ஆலோசனைக் குழு முடிவு எடுக்கும்.
  • அனைத்து இந்திய மொழிகளின் அறிவுசார் வளங்களை வெளியிடுவதே பாரதவாணியின் முக்கிய நோக்கமாகும். மேலும் ஆலோசனை குழுவின் குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் புனைவல்லாத வளங்களின் மாதிரிகளை வெளியிடும்.

பாரதவாணி அதன் அறிவுசார் வளங்களின் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது?

  • பல்வேறு துறை வல்லுநர்கள் உருவாக்கிய அறிவுசார் வளங்களையும் புகழ்பெற்ற நிறுவனங்களின் அறிவுசார் வளங்களையும் வெளியிடும். இதன் தொடக்கமாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் அறிவுசார் வளங்களை பாரதவாணி வெளியிடும்.
  • புதிதாக உருவாக்கப்பட்ட அறிவுசார் வளங்களை வெளியிடுவதற்காக ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி வல்லுநர் குழுவை பாரதவாணி பெற்றிருக்கும்.
  • பிழையில்லா அறிவுசார் வளங்களை வெளியிட எல்லா விதமான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும்.

பாரதவாணி தகவல் தொழில்நுட்ப மொழிக் கருவிகளை வெளியிடுமா?

  • இந்திய மொழிகளுக்கான கிடைக்க கூடிய புதுப்பிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப கருவிகளைச் சேகரித்து வழங்கும் ஒரு தளமாகச் செயல்படும். பாரதவாணி தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும். இவ்வமைச்சகத்தின் முகமை நிறுவனங்களான இந்திய மொழிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப கருவிகளை இந்திய மொழிகளுக்காக வடிவமைக்கிறது. மொழிக்கருவிகளான, எழுத்துருக்கள், மென்பொருட்கள், தட்டச்சுக் கருவிகள், குறுஞ்செயலிகள், பன்மொழிபெயர்ப்பு கருவிகள், எழுத்துரை – பேச்சுரை மாற்றி, பேச்சுரை – எழுத்துரை மாற்றி என பல்வேறு கருவிகள் கிடைக்கும் படி செய்யப்படும்.

பாரதவாணி திட்டத்தினால் சமூகத்திற்குக் கிடைக்கும் பெரிய அளவிலான பயன்கள் யாவை?

  • இந்திய மொழிகளை/தாய்மொழிகளைப் பரவலாக இணையத்தில் காணும் படி செய்வதன் விளைவாக இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது இணையவழி செயல்பாடுகளான வலைப்பூவில் எழுதுதல், சமூக ஊடகம், இணையவழி கற்றல் போன்ற செயற்பாடுகளுக்கு அவர்களின் தாய்மொழியையே பயன்படுத்த பாரதவாணி ஊக்கப்படுத்துகிறது.
  • அழிந்து வரும் மொழிகள், சிறு, சிறுபான்மை மற்றும் பழங்குடி மக்களின் மொழிகளுக்கு/தாய் மொழிகளுக்கு இணையதளத்தில் பாரதவாணி முக்கிய இடத்தை வழங்கும்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் பாரபட்சமின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களை ஒன்றிணைத்து, தொலைவிடப் பகுதிகளையும் அடைந்து கலாச்சார ஒருமைப்பாட்டையும் பரஸ்பர உடன்பாட்டையும் பாரதவாணி மேம்படுத்தும்.

பாரதவாணி அரசு தகவல்களை வெளியிடுமா?

  • அனைத்து இந்திய குடிமக்களும் அறிவுசார் வளங்களை மற்றும் தகவல்களை ஒரே போர்ட்டல் (Portal) வழி பெறும் பொருட்டு விவசாயம், வணிகம், கல்வி, சமூகத்துறை, குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் மற்றும் இதர முக்கிய/ தேவையான போர்ட்டல் ஒவ்வொன்றுடன் பாரதவாணி இணைக்கப்படும்.

பாரதவாணியில் எந்தெந்த மொழிகள் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளன?

  • முதல் ஆண்டில், 22 பட்டியல் மொழிகளுக்கு [அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்பூரி, மைதிலி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சந்தாளி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது] அறிவுசார் வளங்கள் உருவாக்கப்பட்டு பின் படிப்படியாக மற்ற இந்திய மொழிகளுக்கும் உருவாக்கப்படும்.

பாரதவாணியின்  செயல்இலக்குகள் என்ன? எம்மாதிரியான வளங்களை பாரதவாணி வெளியிடும்?

  • அறிவுசார் வளங்களை மேம்படுத்த ஒரு முதன்மை தலைப்புப் பட்டியலை பாரதவாணி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் வெளிக்கொணரும். பின்பு ஒவ்வொரு மொழிக்கும்/தாய்மொழிக்கும் பிரத்தியேக வளங்களை உருவாக்கும் இலக்குகளை அடுத்த ஐந்து ஆண்டுக்கென நியமிக்கும். பல்வேறு மொழிகளில் தற்சமயம் கிடைக்க கூடிய வளங்களை முதலில் வெளியிட முயலும்.

பாரதவாணி பின்வரும் பணிகளில் ஈடுபடும் :

  1. மொழிகள் மற்றும் இலக்கியத்தை டிஜிட்டல் மற்றும் மின்னணு வடிவில் ஆவணப்படுத்துதல்.
  2. எழுத்துப் பிரதி மற்றும் அச்சுக்கலை குறியீடுகளை முறைப்படுத்துதல்/ வடிவமைத்தல்.
  3. அகராதிகள் மற்றும் கலைச்சொற்கள் உருவாக்கம்.
  4. நவீன மற்றும் சங்ககால மொழிகளில் உள்ள இலக்கியங்கள் (எழுதப்பட்ட மற்றும் வாய்வழி) மற்றும் அறிவுசார் நூல்களை மொழிபெயர்த்தல்.
  5. இணையவழி மொழி கற்றல், கற்பித்தல் மற்றும் சான்றிதழ்களுடன் கூடிய மொழி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும். மேலும் விரிவான மற்றும் தொடர்ச்சியான மதிப்பிடுதலை கொண்ட இணையவழி மொழி சோதனை மற்றும் மதிப்பிடுதல் ஏற்படுத்தப்படும்.

பாரதவாணி வெளியிடும் அறிவுசார் களஞ்சியத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியுமா? பாரதவாணியின் காப்புரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

  • பாரதவாணி ஒரு நவீன கால அறிவுசார் களஞ்சியப் போர்ட்டல். இதன் முக்கிய நோக்கம் இதன் அறிவுசார் களஞ்சியத்தை அனைவருடனும் குறிப்பாக இந்திய குடிமக்களுடன் பகிர்ந்து கொள்வதே. இதனால் இவ்வறிவுசார் களஞ்சியத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • சில குறிப்பிட்ட செயல்பாடுகளை உரிமை மீறாமை என அனுமதிக்கும் இந்திய காப்புரிமைச் சட்டம் 1957 – ன் பிரிவு 52-ன்படி இந்தப் போர்ட்டல் அமைந்துள்ளது.

தனியார் நிறுவனங்களும் தனிமனிதர்களும் இத்திட்டத்திற்கு பங்களிக்க முடியுமா? அவர்களின் பங்களிப்புக்கு பாரதவாணி மதிப்பூதியம் வழங்குமா?

  • ஆம் தனியார் நிறுவனமோ தனிமனிதரோ தாங்கள் சொந்தமாக உருவாக்கிய புனைவு இல்லாத வளங்கள்/அறிவுசார் களஞ்சியத்தை மக்களின் இலவசப் பயன்பாட்டிற்கு வழங்கலாம். ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பு பற்றிய விவரம் கொடுக்கப்படும். வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்களின் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • தாய்மொழிகளிலேயே வளங்களைச் சமர்பிக்க பாரதவாணி இணைவழி கருவிகளை வழங்கும்.
  • மூலவளத்திற்கான நிதியுதவி, வளத்தின் தற்பண்பு மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து வளங்களின் நிரந்தரப் பயன்பாட்டிற்கான மதிப்பூதியத்தை ஆலோசனைக் குழு முடிவு செய்யும்.

மாற்றுத் திறனாளிகள் பாரதவாணியை எவ்வாறு பயன்படுத்தலாம்?

  • சர்வதேச அணுகுமுறை அளவுகோலைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இந்திய அரசு வகுத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களையும்  பின்பற்றும்.
  • பார்வையற்றோருக்காக இலவச எழுத்துரை – பேச்சுரை மாற்றி கருவியைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்ள தரவுகளைப் படித்துக் காட்ட பாரதவாணி வழிவகை செய்யும்.

பாரதவாணியின் தரவுகளை யாராவது திருடிவிட்டால் என்ன நடக்கும்?

  • பாரதவாணி பொதுவாக மக்களை நம்புகிறது. கருத்து திருட்டு மற்றும் தரவுகளைத் தவறான வழியில் பயன்படுத்தினால் பாரதவாணியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வரலாம். இதன் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மொழிகளைக் கற்கவும் பரப்பவும் பாரதவாணி ஊக்கமளிக்கிறது. இது இந்திய சமூகத்தின் பாரம்பரிய வளமையைப் பாதுகாக்க உதவுகிறது.

பாரதவாணியின் நிர்வாக அமைப்பு :

      பாரதவாணி கீழுள்ள குழுக்களால் நடத்தப்படும்:

  • தேசிய ஆலோசனைக் குழு, சிறந்த மொழியியல் வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை உள்ளடக்கியிருக்கும்.
  • தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, இவ்விணையதளத்திற்குத் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மொழிக்கருவிகள் உருவாக்குவதற்கு வழிகாட்டியாக செயல்படும்.
  • மொழிவாரியான ஆசிரியர் குழுக்கள், பாரதவாணிக்காக அறிவுசார் வளங்களை திரட்டும் பணியைச் செய்யும்.

பாரதவாணி எங்கே அமைந்துள்ளது?

  • பாரதவாணி கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது.

அஞ்சல் முகவரி :

பாரதவாணி

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்

மானசகங்கோத்ரி

ஹூன்சூர் சாலை

மைசூரு – 570006.

தொலைபேசி             :  + 91 – 821 – 2515820 (இயக்குநர்)

அலுவலகம்               :  + 91 – 821 – 234 5000

தொலைநகல்             :  + 91 – 821 – 2515032 (off)

மின்னஞ்சல்               :  info@bharatavani.in

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  பாரதவாணி செயலி பதிவிறக்க
  Bharatavani Windows App